பிரேசிலில் அக்டோபர் 25 அன்று நடந்த அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்றில், முன்னாள் அதிபர் ஜாயர் பொல்சோனாரோவின் மகனும் தீவிர வலதுசாரி போட்டியாளருமான ஃபிளாவியோ பொல்சோனாரோவைத் தோற்கடித்து வெற்றி பெற்றதற்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தொழிலாளர் கட்சி (பார்டிடோ டோஸ் டிரபல்ஹடோரஸ், பிடி) மற்றும் பிரேசில் மக்களுக்கு சிபிஐ(எம்எல்) விடுதலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த வெற்றி தீவிர வலதுசாரிக்கும் லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஏகாதிபத்திய திட்டங்களுக்கும் முக்கியமான பின்னடைவாகும்.
பிரேசிலின் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களில் லூலாவின் அரசியல் பயணம் வேரூன்றியுள்ளது. பெர்னம்புகோ-வில் விவசாயத் தொழிலாளர்களின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலேயே சாவோ பாவுலோவுக்குக் குடிபெயர்ந்து, உலோகத் தொழிலாளராகப் பணியாற்றி, பின்னர் தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார். 1970-களின் இறுதியில் பிரேசிலின் இராணுவச் சர்வாதிகாரத்திற்கு எதிரான பெரும் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மூலம் அவர் முக்கியத்துவம் பெற்றார். 1980-இல் தொழிலாளர் கட்சியை நிறுவியவர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். 2002-இல் முதன்முதலில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2006-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லூலா, 2022 தேர்தலில் வெற்றி பெற்று 2023-இல் மீண்டும் அதிபர் பதவிக்குத் திரும்பினார். 2026 இரண்டாம் சுற்றில் அவர் பெற்ற வெற்றி, அவரது நான்காவது அதிபர் தேர்தல் வெற்றியைக் குறிக்கிறது; தொழிற்சாலைத் தளத்திலிருந்து அதிபர் பதவி வரையிலான அவரது அசாதாரண அரசியல் பயணத்தையும் குறிக்கிறது; ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்குமான பிரேசிலின் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களால் வடிவமைக்கப்பட்டதாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவை அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து, அந்தப் பிராந்தியத்தை வாஷிங்டனின் பின்கொல்லைப் பகுதியாக மாற்றும் டிரம்ப்பின் ஏகாதிபத்திய திட்டங்களுக்கு லூலாவின் வெற்றி குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். "டான்ரோ கோட்பாடு" என்று அழைக்கப்படுவதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க கண்டம் முழுவதையும் அமெரிக்க செல்வாக்குப் பகுதியாக ஒருங்கிணைக்க முயல்கிறது; இராணுவத் தலையீடு, பொருளாதார நெருக்கடி, அரசியல் அழுத்தம் மூலம் சுதந்திர செயல்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கங்களை அடிபணிய வைக்க முயல்கிறது. வெனிசுவேலாவில் அமெரிக்கப் படையெடுப்பும் கியூபாவுக்கு எதிரான அதிகரிக்கும் அச்சுறுத்தல்களும் இந்த நிகழ்ச்சி நிரலின் மூர்க்கத்தனமான தன்மையை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பிராந்திய அதிகார விளையாட்டில் பிரேசில் ஒரு முக்கியமான பரிசாக இருந்தது; பொல்சோனாரோ முகாம் அமெரிக்க ஆதிக்கம் செலுத்தும் அரைக்கோளத்திற்கான டிரம்ப்பின் தொலைநோக்குடன் இணைந்திருந்தது. தனது வெற்றிப் பேரணியில் லூலா வலுவாகத் தெரிவித்த எதிர்ப்புணர்வு இதை எதிரொலித்தது: "நாங்கள் யாருடைய பின்கொல்லைப் பகுதியும் அல்ல!"
ஜாயர் பொல்சோனாரோ மீதான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பிரேசில் மீது விதிக்கப்பட்ட தண்டனைச் சுங்க வரிகள் உட்பட, பொல்சோனாரோ முகாமுக்கு டிரம்ப் அளித்த ஆதரவு, நாட்டின் அரசியல் திசையைப் பாதிக்க பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்தியதை வெளிப்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியம், பெரு நிறுவனங்களின் அதிகாரத்தையும் சமூக ஊடகக் கையாளுதலையும் பயன்படுத்தி பிரேசிலின் தேர்தல் செயல்முறையைப் பாதித்து, பொல்சோனாரோவின் தீவிர வலதுசாரி முகாமுக்கு ஆதரவாக ஆட்டத்தளத்தைச் சாய்த்தது. அமெரிக்காவின், உலகளாவிய தீவிர வலதுசாரியின் முக்கிய நிதியளிப்பவரும் எக்ஸ்-இன் உரிமையாளருமான எலான் மஸ்க், தீவிர வலதுசாரி சக்திகள் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி பொதுக் கருத்தை வடிவமைக்கும் அரசியல் சூழலை முன்னெடுக்க உதவியுள்ளார்.
ஃபிளாவியோ பொல்சோனாரோவை ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சி, உழைக்கும் மக்களின் அறுதியிடலுக்கும் பிரேசிலின் ஜனநாயக, தேசிய இறையாண்மையைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் எதிரான பரந்த வலதுசாரித் தாக்குதலின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்தக் கடுமையான சவால்கள் மற்றும் முதல் சுற்றில் பின்தங்கியிருந்த நிலையிலும் லூலா தனது ஆதரவை ஒருங்கிணைத்து இரண்டாம் சுற்றில் வெற்றியை உறுதி செய்தார்; இது வெகுமக்களின் மீண்டெழும் திறனையும் மூர்க்கத்தனமான தீவிர வலதுசாரித் தாக்குதலுக்கு எதிராக எதிர்த்து நிற்கும் சக்திகளின் கூட்டு வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
பாலஸ்தீனப் போராட்டத்துடன் பிரேசில் மக்களின் ஒருமைப்பாட்டையும் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதையும் லூலாவின் வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. டிரம்ப்-நெதன்யாகு குற்ற அச்சு, லத்தீன் அமெரிக்க நாடுகளைத் தனது நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிய வைக்கவும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களுக்கான எதிர்ப்பை மௌனமாக்கவும் முயன்ற வேளையில், பிரேசில் பாலஸ்தீன உரிமைகளுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. காசா மீதான இனப்படுகொலைப் போர், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில் தென்னாப்பிரிக்காவுடன் நின்ற தெற்குலக நாடுகளில் பிரேசிலும் ஒன்றாகும்.
தீவிர வலதுசாரிக்கும் ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கும் எதிராக நின்ற பிரேசில் மக்கள், தொழிலாளர் கட்சி, அனைத்து முற்போக்கு, ஜனநாயக, தொழிலாளர் வர்க்க சக்திகளுக்கு சிபிஐ(எம்எல்) விடுதலை தனது புரட்சிகர ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
