வீட்டுமனை, வீடு இல்லாத ஏழைகள் குடியேறும் போராட்டம்

$articleData->title

வீட்டுமனை, வீடு இல்லாத ஏழைகள் குடியேறும் போராட்டம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், உள்ளிக்கடை ஊராட்சியில் உள்ள வறிய மக்களுக்கு வீட்டுமனை கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக சிபிஐ(எம்எல்), அவிகிதொச வும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், அக்டோபர்-15 அன்று கணபதி அக்ரகாரத்தில் மீண்டும் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் அக்டோபர்-30க்குள் வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் காத்திருந்தனர். இந்நிலையில் கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியபடுத்தியதால் மக்கள் அனைவரும் வட்டாட்சியர் இறுதிக் கெடுவாக சொல்லியிருந்த 30/10/2026 இரவு 12 மணிக்கு மக்கள்  குடியேறினர்.


கட்சி, சங்க வழிகாட்டுதலின்படி, ஒரு வார காலமாக தயாரிப்புகளை செய்து வந்த மக்கள் திட்டமிட்டவகையில் நள்ளிரவில் குடியேறினர். கட்டுக்கோப்புடன்  முன்னணி தோழர்களின் தலைமையில் பொதுமக்கள் அணிவகுத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 90 வீடுகளை திட்டமிட்ட நேரத்திற்குள் கட்டிமுடித்து விட்டனர். தகவலறிந்து 31/10/2026 பாபநாசம் வட்டாட்சியர், காவல்துறையினர் வந்து மக்கள் வீடு கட்டியதை எதிர்த்து கடுமையான வாக்குவாதம் செய்தனர். நாமும் கோரிக்கை நிறைவேறாமல் போராட்டத்திலிருந்து விலகமாட்டோமென உறுதியாக கூறிவிட்டோம். போராட்டம் தொடர்கிறது.

மக்கள் குடியேறியிருக்கும் நத்தம் புறம்போக்கு நிலத்தை வசதி படைத்த மூன்று பிராமணர்கள் சேர்ந்து, அதிகாரி(யும் பிராமணர்) உடந்தையுடன், போலி ஆவணங்களைத் தயாரித்து வகை மாற்றம் செய்து அடையாளம் தெரியாத 50 நபர்கள் பெயரில் பட்டா வாங்கி, பின்னர் தங்கள் பெயருக்கே அவற்றை மாற்றிக் கொண்டனர். மேலும் 2017ல், அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இந்த 1.5 ஏக்கர் நிலத்தை  விற்பனை செய்திருக்கிறார்கள்.

எனவே, தகுதியற்ற நபர்களுக்கு பொதுச் சொத்தை அபகரித்து பயன்படுத்தும்போது அதிகாரிகளிடம் முறையாக வீட்டுமனை கேட்டு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது மாவட்ட நிர்வாகம் பழிசுமத்துகிறது. ஒடுக்குமுறை ஏவத் தயாராகி வருகிறது.

இதைப் பற்றியெல்லாம் அஞ்சாமல் குடியேறிய மக்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு அங்கேயே சமைத்து சாப்பிட்டு தமக்கான சொந்த இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகமாக உள்ளனர். இதற்கிடையில் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். குடியேறிய மக்கள் சார்பில் 15 பேர் பிரபு தலைமையில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் மாசிலாமணி, அவிகிதொச மாநிலச் செயலாளர் ஜெசிந்தா, பிரேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோட்டாட்சியர் வலியுறுத்த, பேச்சு வார்த்தையில் பிரதிநிதிகள் முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். வீட்டு மனை இல்லாதவர்களின் பட்டியலை மீண்டும் ஒருமுறை கொடுங்கள் என கோட்டாட்சியர் கூறியுள்ளார். கேட்டவாறு புதிய மனுக்கள் 2ம்தேதி கோட்டாட்சியரிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையின் விளைவாக, ஆக்கிரமிப்பாளர் கட்டியுள்ள வீடுகளில் ‘சட்டவிரோத கட்டிடங்களை 4 வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டுமென கோட்டாட்சியர் அறிவிப்புச் செய்துள்ளார். 

இந்த வட்டாரத்தில் வீட்டுமனை, வீடு கோரி கடந்த 4 ஆண்டாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த குடியேறும் போராட்டம் அனைவரையும்  உற்சாகப்படுத்தியிருக்கிறது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

மாவட்டச் செயலாளர் மாசிலாமணி, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் போராட்டத்துடன் நெருக்கமாய் இருந்து வழிகாட்டி வருகின்றனர். மாவட்டக் கட்சி, அவிகிதொச, பெண்கள் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை முழுமையாக ஈடுபடுத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. 02-11-’26 அன்று கட்சி மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி குடியேறிய மக்களை‌ச் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

 தோழர் ஸ்வதேஷுக்கு அஞ்சலி!

 

இகக(மாலெ) விடுதலை கட்சியின் மிக முக்கியமான மூத்த தலைவர் தோழர் ஸ்வதேஷ் அவர்கள் மரணமுற்ற செய்தி வந்தடைந்ததை அடுத்து, இரவோடு இரவாக குடியேறிய அந்த இடத்திலேயே அக். 31 அன்று காலை தோழர் ஸ்வதேஷ் அவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. திரளான மக்கள் கூடியிருக்க, தோழரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் மாசிலாமணி, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் பிரபு, கண்ணய்யன், ஜெசிந்தா, தவச்செல்வம், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ரங்கசாமி, வளத்தான், ரேவதி, மணிமேகலை, ஜோதிவேல், ராஜலட்சுமி, சிவராஜ் மற்றும் தஞ்சை மாவட்டக்கமிட்டி, பாபநாசம் ஒன்றியக் கமிட்டி தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர். கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் தோழர் ஸ்வதேஷுக்கு புகழஞ்சலி செலுத்தியும் குடியேறிய மக்களின் போராட்டத்தைப் பாராட்டியும் பேசினார்.


கடைசி செய்தி:

குடியேறிய 5வது நாள், 04-11-’26, காலை 10 மணி அளவில் சுமார் 300 காவலர்கள், ஏராளமான வாகனங்கள் புடைசூழ வட்டாட்சியர், டிஎஸ்பி குடியேறிய இடத்திற்கு வந்தனர். அப்புறப்படுத்த வலியுறுத்தினர். மக்கள் மறுத்துவிட்டனர். உள்ளே நுழைந்து குடிசைகளை பிரித்து எறிவோம் என எச்சரித்தனர். தலைவர்களும் மக்களும் குறிப்பாக பெண்கள் கம்பிக் கதவுக்கு உள்ளே போலீசை நுழைய விடமால் தடுத்து நிறுத்திக்கொண்டே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நமது வேண்டுகோள்படி, டிசம்பர் 15 க்குள் தகுதி உள்ளவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என ஒலிபெருக்கியில் வட்டாட்சியர் அறிவித்தார். அதனடிப்படையில் இன்று மாலைக்குள் குடிசைகளை திரும்ப எடுத்துக் கொள்வதென உடன்பாடு ஏற்பட்டது.மூன்று மணி நேரம் நீடித்த தள்ளு முள்ளு பிற்பகல் ஒருமணிக்கு முடிவுக்கு வந்தது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் மாவட்ட ஆட்சியருடன் பேசியுள்ளார்.  கட்சி தலைமையகத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமையில் தோழர்கள் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

10 November, 2026